January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வதென்பது தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு சமம்”

Photo: Twitter/ Field Marshal Sarath Fonseka

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வதானது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு சமமானதாகும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சம்பந்தனோ, சுமந்திரனோ இனவாதம் பேசவில்லை என்பதோடு, அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்தே பேசி வருகின்றதாகவும், அதனை சிங்கள தரப்புகள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டுமென்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்கள் முதலில் ஒழுக்க நெறியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஒழுக்கம் இல்லாதவர்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளதால், நாடும் ஒழுக்கமற்றதாக மாறக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவம் பாரிய பின்னடைவைச் சந்தித்த 2009 ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 1 ஆம் திகதிகளில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தபோதும், தானே அதற்கு இணங்கவில்லை என்றும் சரத் வீரசேகர போன்றவர்கள் வரலாறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, யுத்த வெற்றி இராணுவத்தை மாத்திரமே சாரும் என்றும் அதில் அரசியல்வாதிகள் உரிமை கொண்டாட முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சர் வீரசேகர, வெறுமனே தெற்கு சிங்கள மக்களுக்கான அமைச்சர் மாத்திரமல்ல, வடக்கு- கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களினதும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு இனத்தின் உரிமைகள் சார்ந்து பேசுபவர்களை அரசியல் ரீதியில் தடைசெய்ய வேண்டும் என்று கூறுமளவுக்கு சரத் வீரசேகர முட்டாளா? என்றும் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.