நிதிநெருக்கடி காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சம்பளம் வழங்கியுள்ளார்.
சிறிகொத்தவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக, 3 மில்லியன் ரூபாயை ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் 25ஆம் திகதி வழங்கவேண்டிய சம்பளத்தைச் செலுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நிதி வழங்கியுள்ளதாக கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஷமால் செனரத் உறுதிபடுத்தியிருக்கின்றார்.
சிறிகொத்தவில் சுமார் 36 ஊழியர்கள் கடமைபுரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த முடியாமல், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகம் திண்டாடி வருவதாக, அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
இதேவேளை, சவாலான சூழ்நிலைகளிலும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது கடமைகளை ஒருபோதும் புறக்கணித்தது இல்லை என்று, கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.