January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வன வளத்தைப் பாதுகாப்பதற்காக 130 ஏக்கரில் காடு மீள்வளர்ப்புத் திட்டம்

நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கும் வன விலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்துவதற்கும் வலப்பனை பிராந்தியத்தின் தெரிபஹ பகுதியில் 130 ஏக்கர் நிலப்பரப்பில் காடு மீள்வளர்ப்புத் திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத் தீ மூலம் பிராந்திய வன சரணாலயத்தின் பெரியதோர் பகுதி அழிந்துள்ளதோடு, குறித்த பிரதேசம் புற்தரையாக மாறியுள்ளது.

இதனால், பிரதேசத்தின் நீர் வளம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வன விலங்குகளின் வாழ்விடமும் அழிவுக்குட்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த காடு மீள்வளர்ப்புத் திட்டத்தை மகவெலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த காடு மீள்வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 30 பூர்வீக மர வகைகளைச் சேர்ந்த 21,000 மரக் கன்றுகள் நடப்படவுள்ளதோடு, 26,500 பூர்வீக தாவர இனங்களின் விதைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

காட்டுத் தீயால் பாதிப்புக்குள்ளான வன சரணாலயத்தை 7- 10 ஆண்டுகளில் இரண்டாம் நிலைக் காடாக மாற்ற முடியுமென்று காடு மீள்வளர்ப்பு நிபுணர் பஸ்லி மொஹமட் மற்றும் உயிரியல் பல்வகைமை நிபுணர் விஜய் ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வன, வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட காடு மீள்வளர்ப்புத் திட்டத்தில், மத்திய மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எஸ்.பி. ரத்னாயக்க, திட்ட பணிப்பாளர் சுசந்த மெடிவகே ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.