November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் வடமாகாணத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு: 3,500 வீடுகள் சேதம்

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான காற்று மற்றும் வெள்ளத்தால் 94 வீடுகள் முழுமையாகவும்,  3024 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர்  தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின்காரணமாக  யாழ் மாவட்டத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 388 குடும்பங்களை சேர்ந்த 1339 பேர் 21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 1,926 குடும்பங்களை சேர்ந்த 5,668 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 703 குடும்பங்களை சேர்ந்த 2,151 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2,227 குடும்பங்களை சேர்ந்த  7,784 பேரும், வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வட மாகாணத்தில் 27,613 குடும்பங்களை சேர்ந்த 91,022 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3,576 குடும்பங்களை சேர்ந்த 1,938 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாகாணத்தில் 98 வீடுகள் முழுமையாகவும்,  3,414 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து இன்று அதிகாலை வரையில் 193.2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று மாலை 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.