October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிங்களவர்களை சீண்டுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றம் வருவதைத் தடை செய்ய வேண்டும்”

சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு வருவதைத் தடை செய்யவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டுக்காகச் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஷ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு முற்றிலும் விரோதமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன். அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராக இருந்ததால் அந்தத் தவறை இழைத்துள்ளார்.

ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக அழிக்கப்பட்டது. பொட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது கெமரூஜ் கட்சி காணாமல்போய்விட்டது. சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது பாத் கட்சி அழிக்கப்பட்டது. ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயகக் கட்சி தடைசெய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டபோது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார். அவர் அவர்களை மன்னித்தார். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனைச் சாதகமாகப் பயன்படுத்துகின்றது.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரைக் கொலை செய்த பண்டிதரின் வீட்டுக்குச் சென்ற சுமந்திரன் எம்.பி. மாவீரர் தினத்தை விளக்கேற்றி அனுஷ்டிக்கின்றார். பண்டிதருக்குப் புகழாரம் சூட்டுகின்றார்.

தனது பாதுகாப்புக்கு அளிக்கபபட்ட விசேட அதிரடிப் படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்புப் படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு வந்துள்ளது.

அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார். சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும் என்றார்.