November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலைகளில் இதுவரையில் 2000 பேருக்கு கொரோனா தொற்று: இலங்கையின் இன்றைய நிலவரம்


File Photo

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 648 பேர் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பேலியாகொட மீன் சந்தை கொத்தணி ஊடாக 451 பேரும், சிறைச்சாலைகளுக்குள் உருவாகியுள்ள கொத்தணி ஊடாக 197 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 27,876 ஆக அதிகாரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் 370 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதற்கமைய தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,460 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று

நாட்டின் சிறைச்சாலைகளில் இதுவரையில் 2,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் 91 அதிகாரிகளும், 2,080 கைதிகளும் இவ்வாறாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான கைதிகளில் 600 பேர் இது வரையில் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வெலிக்கடை, மஹர மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளிலேயே  அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட கைதிகள்

கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் பலர் யாழ்ப்பாணம் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பஸ்களில் இவர்கள் இன்று முற்பகல் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போகம்பரை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகளில் 181 பேருக்கு நோற்றைய தினத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே கைதிகள் தனிமைப்படுத்தலுக்காக கொடிகாமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹட்டன் – நோர்வூட் பாடசாலைக்கு பூட்டு

ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஹட்டன் – நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

குறித்த ஆசிரியருக்கும், அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆசிரியர் கடந்த 28 ஆம் திகதியும் 30 ஆம் திகதியும் பாடசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் அப்பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்களை சுயதனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியருடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 100 மாணவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.