இலங்கை சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான குற்றச்சாட்டுக்களுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8,000 கைதிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே வெலிக்கடை சிறைச்சாலைக்கு மேற்கொண்ட கள விஜயத்தின் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் பிணை நடைமுறைகளை சட்ட ரீதியாகப் பூரணப்படுத்திக்கொள்ள முடியாமல், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதன் காரணமாகவே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாகம் தெரியவருகின்றது.
அத்தோடு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராஜாங்க அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகள் மேற்கொண்டு வந்த ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.