யாழ்ப்பாண மாவட்டத்தில் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில், நிவர் மற்றும் புரவி சூறாவளிகள் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, பாடசாலைகளில் அமைந்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றி, பாடசாலைகளை மீளத் தொடங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு நிலையை மீள கட்டியெழுப்பும் நோக்கோடு பல்வேறு தொழிற் துறைகளிலும் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மீன்பிடித் தொழில் துறை, சிறு கைத்தொழில் முயற்சிகள் மற்றும் விவசாயத் துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்; கல்வித்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறுபட்ட கட்டமைப்புக்களிலும் ஏற்பட்டுள்ள சேதங்கள் உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதேச செயலாளர்களின் அறிக்கைகளின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கடலரிப்பு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்காலத்தில் தடுப்பதற்கும், வடிகாலமைப்பு கட்டமைப்புகளை மீள சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
மேலதிக அரசாங்க அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ். மாநகர முதல்வர் இ.ஆர்னல்ட், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதாரத் துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.