கண்டி– திகன பிரதேசத்தில் இன்று சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை தெரிவித்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த நில அதிர்வு 2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலக் கீழ் கற்பாறைகளின் நகர்வுகளால் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திகன, அம்பாக்கோட்டை, கெங்கல்ல, அளுத்வத்த உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களிலும் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தொடர்ச்சியாக ஏற்படுகின்ற நிலநடுக்கத்திற்கு திகன பிரதேசம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுண்ணாம்புக்கல் அகழ்வுப் பணிகளே காரணம் என்று பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.