
ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் எனக் கோரி அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் அட்டன் நகரில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நுவரெலியா மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் மஞ்சுள சுரவீர முன்னெடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்’ என்றும் ‘வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் ஆயிரம் சம்பளத்தை உள்வாங்கு’ என்றும் கூறும் வசனங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடைவெளிகளை ஏற்படுத்தி 15 உறுப்பினர்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.