பேருந்து போக்குவரத்து தொடர்பாக நாளை முதல் புதிய முறைமையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பேருந்து நிலையங்களிலிருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் பேருந்துகளில் சமூக இடைவெளிகளை பேணியே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதனையும் மீறி அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையிலேயே ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை பின்பற்றி பேருந்துகளில் பயணிகளை இருக்கைக்கு ஏற்றவாறு மாத்திரம் அழைத்துச் செல்லக் கூடிய வகையில் அண்மையில் பேருந்து கட்டணங்கள் அதிகாரிக்கப்பட்டிருந்தன.
ஆனபோதும் சில பிரதேசங்களில் ஆசன எண்ணிக்கையை விடவும் அதிகளவான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.