July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க வேண்டாம்’

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளதாக அறிந்துகொள்ள முடிகின்றது.ஆனால் அந்த தவறை செய்ய வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 49 வீதம் இந்தியாவிற்கும், 51 வீதம் இலங்கைக்கும் என்ற அடிப்படையில் கொடுத்து அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு முனையமும் 65 வீதம் இந்தியாவிற்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அபிவிருத்திகளில் இலங்கைக்கு கிடைத்த இலாபம் ஒன்றுமே இல்லை.

இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை இன்றும் நட்டத்தில் இயங்கிக்கொண்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு முனையம் இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய வளமாகும். அதனை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம்.

மேலும் துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 900 பேரளவில் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் துறைமுகம் முடக்கப்பட்டுள்ளது.சர்வதேச கப்பல்கள் நெருக்கடிகளை சந்தித்துள்ளன. இதனால் இலங்கைக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைவடையும் நிலைமை உருவாகியுள்ளது. பிரதான சர்வதேச நிறுவனங்கள் இலங்கை வருவதை தவிர்த்துள்ளனர். துறைமுகத்தின் கடன்கள் மாத்திரம் மொத்தக் கடன்களில் 24 வீதமாகும். இதில் இருந்து துறைமுகங்களை எவ்வாறு மீட்பது, அதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.