October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும்” : நீதி அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு

நீண்டகாலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கான மகஜர் ஒன்றையும் அவர்கள் நீதி அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவர்களை உடனடியாக விடுவுக்குமாறு வலியுறுத்தும் வகையில் ஆளும்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர் இன்று நீதி அமைச்சரை சந்தித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகஜர் ஒன்றை கையளித்து நீதி அமைச்சரை அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு பதில் தெரிவித்துள்ள நீதி அமைச்சர், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாட முடியும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டால் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.

அது மாத்திரமன்றி புதிய அரசியலமைப்புத் தயாரிப்பு விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் உள்வாங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் இது தொடர்பில் எழுத்துமூலமான யோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கைதிகள் விடுதலை மாத்திரமன்றி சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் எடுத்துச் செல்வதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.