File Photo
தமிழ் தேசத்தை அங்கீகரிக்க கூடிய வகையிலான புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராஜா கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி வடக்கு,கிழக்கிலுள்ள விமான நிலையங்கள்,துறைமுகங்கள் எமது தமிழ் தேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படக்கூடிய வகையில் அரசியல் அதிகாரக்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் செல்வராஜா கஜேந்திரன் எம்.பி கூறியுள்ளார்.
அரச கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு, தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட்டு, வடக்கு – கிழக்கு தமிழ் தேசம் அதனை நிர்வகிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதனூடாக மட்டும்தான் எங்கள் மக்களின் பொருளாதாரத்தை நாங்கள் கட்டி எழுப்பக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறைக்கு வடக்கு, கிழக்கில் என்ன நடந்துள்ளது என்றும், இத்துறையால் தமிழ் மக்கள் நம்மை பெற்றுள்ளார்களா என்றும் கஜேந்திரன் எம்.பி கேள்வியெழுப்பினார்.
மேலும், சுற்றுலாத்துறையின் பெயரால் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு யார் யாருக்கோ எல்லாம் வழங்கப்படுவதாகவும், இந்த விடயங்கள் அனைத்தும் தமிழர்களின் கைகளில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கமைய தமிழ் தேசத்தை அங்கீகரிக்க கூடிய வகையிலான புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துவதாகவும், இந்த விடயங்களை அரசாங்கம் கருத்தில் கொண்டு எமது மக்களையும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பலாலி விமான நிலையம் ,திருகோணமலை ,மட்டக்களப்பு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் எமது தமிழ் தேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட க்கூடிய வகையில் அரசியல் அதிகாரக்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் செல்வராஜா கஜேந்திரன் எம்.பி கூறினார்.