இலங்கையில் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் தமிழர்களோ, முஸ்லிம்களோ அல்ல, சீனர்களே என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வளங்களை முழுமையாகச் சூறையாடும் சீனர்களே, இந்த நாட்டுக்கு உண்மையான அச்சுறுத்தல் என்பதை சிங்கள மக்களிடம் எடுத்துரைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அரசாங்கம் இலங்கையை இன்னொரு பாகிஸ்தானாக மாற்ற முயற்சிக்கின்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய பல வாய்ப்புகள் காணப்படுவதாகவும், அவற்றைக் கருத்திற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யாது வேடிக்கை பார்க்கும் அரசாங்கம், வடக்கு கிழக்கில் மாவீரர் தினம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவுகளை இட்ட சிறுவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் சாணக்யன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாமியர்கள் ஜனாஸா நல்லடக்கத்துக்கான உரிமையை வென்றெடுக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமை குறித்து வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.