வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கட்டடங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் அந்தக் கட்டடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த வைத்திய சேவைகளை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
புரவி சூறாவளியை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக யாழ். போதானா வைத்தியசாலை விடுதிக் கட்டடங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன.
யாழ். நகரில் முறையான வடிகாலமைப்பு வசதி இல்லாமையினாலேயே இவ்வாறான வெள்ள நிலைமைக்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தி இங்கு இனியும் இவ்வாறான அனர்த்த நிலைமைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.