தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் கட்சியே தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியல்ல என்று அக்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவரும் பிளவுபடுத்தவோ, தடை செய்யவோ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் காலத்தில், புலிகளின் அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டதாகவும், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சியைத் தடை செய்வதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதனை விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி அழைக்க முடியாது என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்த தலைமையிலான அரசுடன் உண்மையான, நேர்மையான, நீதியான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினர் இனவாத ரீதியான கருத்துக்கள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.