May 23, 2025 9:18:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர் அழுத்த மின் கோபுரங்களை நிறுவும் நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக மின்சார சபையால், உயர் அழுத்த மின்சார கோபுரங்களை  நிறுவ முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பாடசாலை மைதானத்தின் முன்பாக மின்சார சபையால் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று மின்சார கோபுரங்களை நிறுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாடசாலை அதிபர் ரம்சின், நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் குறித்த இடத்தில் மின்சாரத்தூண் நிறுவ வேண்டாம் எனவும் அவ்விடத்தில் உயர் அழுத்த மின்சாரத் கோபுரங்களை நிறுவினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

அத்தோடு இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், நகரசபை, மின்சார சபை என்பவற்றுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் மின்சார சபை தொடர்ந்தும் தமது செயற்பாட்டை முன்னெடுத்தமையால் அவ்விடத்தில் திரண்ட பழைய மாணவர்கள், இளைஞர்கள் மின்சாரசபைக்கு எதிராக வவுனியா – மன்னார் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன், பிரதேச செயலாளர் ந.கமலதாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வவுனியா மின்சார சபையின் பிரதான மின் பொறியிலாளர் மற்றும் பொறியிலாளர் ஆகியோர் வருகை தந்து இவ்விடத்தில் மின்சாரத் தூண் நிறுவப்படாது என உறுதி மொழி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து வடமாகண மின்சாரசபை பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக, குறித்த இடத்தில் மின்சாரத் தூண்கள் நிறுவப்படாது எனவும், இது தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் எனவும் கூறினார்.

மின்சாரத் தூண்களை நிறுவ வந்த அதிகாரியால் வழங்கப்பட்ட கடிதத்தையடுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், காதர் மஸ்தான் ஆகியோர் தொலைபேசி மூலம் வழங்கிய உத்தரவாதத்தையடுத்தும் இந்தப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.