இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பகுதியிலுள்ள பொது மக்கள் பார்வை அரங்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் குறித்த பகுதி திறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, விமான நிலையத்துக்கு வரும் பயணியொருவர், தன்னுடன் இன்னுமொருவரை மாத்திரமே அழைத்து வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கட்டாய சுகாதார தனிமைப்படுத்தல் நடைமுறைகளால் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாது போன பயணிகள், விமான நிலையத்தின் தீர்வையற்ற விற்பனை நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்த நாள் முதல், ஒரு மாத காலத்திற்கு விமான நிலையத்திற்கு வருகை தந்து, தீர்வையற்ற விற்பனை நிலையங்களில் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.