புரவி சூறாவளியுடன் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாரிய அளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பெரும்போக நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரத்து 954 ஏக்கர் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
விவசாய நிலங்களில் சுமார் ஒரு அடிக்கு மேல் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தால் பெரும்போக விவசாயம் முழுமையாக பாதிப்படையும் என்றும் பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 1061 ஏக்கர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4827 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 3274 ஏக்கர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 11,925 ஏக்கர் மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் 2867 ஏக்கர் என் நெற்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதேவேளை, மடு பிரதேச செயலாளர் பிரிவில் சின்ன வலயன் கட்டு சிறிய நீர்பாசனக் குளம் உடைப்பெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.