மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை அடங்கிய விளக்கக் குறிப்பொன்று சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த விளக்கக் குறிப்பை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், இந்த விளக்கக் குறிப்பு தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைப்பது குறித்து பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டமா அதிபரிடம் அறிக்கை கோரியதைத் தொடர்ந்தே, சட்டமா அதிபர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையை வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.
தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்தவுடன் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை தாம் பரிசீலிக்கவுள்ளதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த விளக்கக் குறிப்பு சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்கு தொடர்பான சந்தேக நபர்களில் அர்ஜுன் மகேந்திரன் பிரதானமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.