October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அரசிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்’

நாட்டின் அரசமைப்பை மீறி,சட்டங்களை மீறி வடக்கு, கிழக்கில் தாம் நினைத்த மாதிரி செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்தான் அரசிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தமிழ் இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை விளக்கீடு அன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய அராஜகங்களுக்கு அரசு உடனடியாக தனது மன்னிப்பைக் கோரவேண்டும் அல்லது குறைந்தபட்சம் நடந்து முடிந்த சம்பவங்களுக்குத் தனது வருத்தத்தையாவது தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலம். இந்தக் காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதேவேளை, பயங்கரவாதச் தடைச் சட்டமும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த இரு சட்டங்களையும் மீற எவருக்கும் அனுமதி இல்லை.

போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழர்கள் நினைவுகூர வேண்டுமெனில் வீடுகளில் அமைதியாக இருந்து நினைவுகூரலாம். அதேவேளை, தமிழ் இந்துக்கள் தமக்குரிய பண்டிகைகளைக் கொண்டாட வேண்டுமெனில் வீடுகளில் இருந்து தங்கள் குடும்பத்துடன் கொண்டாட முடியும்.

இதைவிடுத்து தற்போதைய நிலைமையில் பொது இடங்களில் எந்த நிகழ்வுகளையும் ஆடம்பரமாகக் கொண்டாட முடியாது.

அரசின் இந்த வேண்டுகோள் சாதாரண தமிழ் மக்களுக்கு விளங்குகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் அவர்களின் தூண்டுதலின் பிரகாரம் செயற்படும் நபர்களும் எமது வேண்டுகோளை உதாசீனம் செய்கின்றார்கள். நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளுக்கும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் சவால் விடும் வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

இந்தநிலையில், தமிழ் இந்து மக்களிடம் அரசு மன்னிப்புக் கோர வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுப்பது வெட்கக்கேடானது சிறுபிள்ளைத்தனமாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.