இன்று தமிழ் மக்களை கஷ்டப்படுத்தும் சரத் பொன்சேகா, ஜனாதிபதியாகி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து தான் அச்சப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
‘தற்போது வடக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புரவி புயல், மாவீரர் தினத்தன்று வந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருபேன்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்ட கருத்தை மேற்கோள் காட்டியே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களைப் புண்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதித் தேர்தலொன்றில் தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தமை மன வேதனையளிப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் கருத்து மிகவும் மோசமானதென்று தெரிவித்துள்ள அவர், அதனைக் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை அரசாங்கம் எதிர்க்கின்றது என்பது உண்மையாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் இறந்தவர்களை அனுஷ்டிக்க உறவினர்களுக்கு உரிமை உண்டு என்றும் மனிதாபிமானமுள்ள எவரும் அதனை எதிர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.