January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் மருத்துவமனைகளில் கொவிட் சிகிச்சையை ஆரம்பிக்க யோசனை: இலங்கையின் இன்றைய நிலவரம்

file photo

கொரோனா தொற்றுக்கு உள்ளான 517 பேர் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 26,555 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் 406 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 19,438 ஆக அதிகரித்துள்ளது.

தெஹிவளையில் 160 பேருக்கு தொற்று 

தெஹிவளை  மற்றும் இரத்மலான பிரதேசங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 160 பேர் நேற்று  அடையாளம் காணப்பட்டதாக தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும்  இரத்மலானையில் 70 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த பிரதேசங்களில் 2139 பேரிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 160 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைக் கைதிகளுக்கு என்டிஜன் பரிசோதனை

மஹர சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில், என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் தற்போது 2,800 இற்கும் அதிகமான கைதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இதுவரையில் 1,382 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து

கொழும்பிலிருந்து கொரோனா தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்திற்கு ஏற்றிச்சென்ற பஸ், பொலனறுவை – வெலிக்கந்தை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது இரண்டு பஸ்களினதும் சாரதிகள் உட்பட பஸ்ஸில் இருந்த கொரோனா நோயாளர்களில் இருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு – புனானை சிகிச்சை நிலையத்திற்கு 23 பேரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் புனானை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 476 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

டுபாய், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

விமான நிலைத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளை தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 288 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையின்  கண் சிகிச்சைப் பிரிவுக்கு பூட்டு

கண்டி தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

கண் சிகிச்சை பிரிவின் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் உறுதியாகியுள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்ணான்டோ கூறியுள்ளார்.

குறித்த பிரிவில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளின் நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாகவும், கண் சிகிச்சைப் பிரிவின் ஏனைய ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெல்லவ பொலிஸ் நிலையமும் மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றாளர் என உறுதியான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பங்கேற்ற விருந்தில்,  குருநாகல் – வெல்லவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் சில அதிகாரிகள் பங்கேற்றுள்ளதால், அந்த பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் நிலையத்தை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பொலிஸாரை வரவழைத்து, சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  குருநாகல் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு தற்போது அரச சிகிச்சை நிலையங்களிலேயே சிகிச்சையளிக்கப்படுகின்றது.

இதன்போது, அங்கு ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளை தவிர்க்கும் வகையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பாக கொவிட் தடுப்பு செயலணி பிரதானியான இராணுவத் தளபதியுடன் விசேட மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பாக இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிசிஆர் பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் நடத்துவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.