November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் முதலீடுகளை செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராகவுள்ளனர்”

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சனையாக உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்திலேயே சிறீதரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள போதும், தமது பகுதியில் தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் இராணுவ முகாம்களே காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகிய தொழிற்சாலைகளில் தொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதினூடாக வேலையற்ற இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொழில்சார் சூழலை உருவாக்கும் வாய்ப்புகள் பல இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவை முடக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அரசியல் ரீதியாக அன்றி, ஜனநாயக அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் வடக்கு அல்லது கிழக்கில் கைத்தொழில் வலயமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ளதாகவும், அரசாங்கம் அவர்களையும் தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.