மஹர சிறைச்சாலையில் வன்முறைக்கு காரணமானதாக கூறப்படும் மாத்திரை வகைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வன்முறைக்கு முன்னர் கைதிகள் பல்வேறு வகை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
அந்த மாத்திரைகள் தொடர்பில், மருந்தியல் வல்லுநர்களிடம் கருத்தினை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் குறித்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் சுமார் 56 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், மற்றுமொரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது, கடந்த 29 ஆம் திகதி மாலை மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறைச்சாலைகள் சீர்திருத்தங்கள் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று முன்தினம் மஹர சிறைச்சாலைக்கு சென்று அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பாக கைதிகளிடம் தகவல்களை கேட்டறிந்துள்ளார்.