உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு உரிய வகையில் தண்டனையை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாற்று நடவடிக்கையை நாட வேண்டி ஏற்படும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன பேராயரை சந்திக்க சென்றிருந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை நிலைமை எப்போது வௌிவரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். குண்டுத்தாக்குதல் நடத்தியமை, அதற்கு உதவியமை, நிதி வழங்கியமை தொடர்பில் நாம் திருப்தி அடையக் கூடிய வகையில் விசாரணைகள் இடம்பெற்றதா என்ற எண்ணம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அது அவ்வாறே காணப்படுகின்றது என்பதை துரதிஷ்டவசமாக எமக்கு கூற வேண்டியுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்சினைகளினால் இந்த விசாரணைகளை பின்தள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். ஜனாதிபதியால், இந்த அரசாங்கத்தினால் உறுதியான வாக்குறுதி வழங்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புடைய ஆணைக்குழுக்கள் குறித்து மாத்திரமன்றி குறிப்பாக அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு இல்லையெனில் மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும். வேறு குழுக்களுக்கு இந்த பொறுப்பை வழங்க நேரிடும் என்று பேராயர் தெரிவித்துள்ளார்.