January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 2 மாதங்களில் 10,000 பேருக்கு கொரோனா தொற்று : இலங்கையின் இன்றைய நிலவரம்

Photo: Twitter/ Srilanka Red cross

கொரோனா தொற்றுக்கு உள்ளான 627 பேர் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 26,037 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய  728 பேர் இன்றைய தினத்தில் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி குணமடைந்தவர்களின்மொத்த எண்ணிக்கை 19,032 ஆக அதிகரித்துள்ளதாகவும், தற்போது வைத்தியசாலைகளில் 6604 பேரே சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 2 மாதங்களில் 10,000 பேருக்கு தொற்று

மேல் மாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 17,000 ஐ கடந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 10,140 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 6,502 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 1073 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிகமான தொற்றாளர்கள் 

நேற்றைய தினத்தில் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் 800 ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 402 பேரும், கம்பஹா களுத்துறை மாவட்டத்தில் 188 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 106 பேரும் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு

கிழக்கு மாகாணத்தில் இன்று மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

இதுவரையில் அம்பாறையில் 172 பேருக்கும், மட்டக்களப்பில் 92 பேருக்கும், திருகோணமலையில் 16 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாண மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று 1,389 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் எதிர்ப்பில் ஈடுபட்ட பயணிகள்

ஓமானிலிருந்து இலங்கைக்கு இன்றைய தினத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த 20 பேர் பிசிஆர்  பரிசோதனை செய்வதற்கு தம்மிடம் பணம் இல்லையெனத் தெரிவித்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை 7.40 மணியளவில் ஓமானில் இருந்து 54 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்களில் 20 பேர்  பிசிஆர் பரிசோதனையை செய்வதற்கு தம்மிடம் பணம் இல்லையென தெரிவித்து எதிர்ப்பில் ஈடுபட்டதாக விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் பயணிகளின் கோரிக்கையை ஆராய்ந்த அதிகாரிகள், விமான நிலையத்தில் அமைந்துள்ள இரசாயன பகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி அவர்களுக்கான அந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையிலுள்ள 11,500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 28,000 வரையான கைதிகளில்  11,500 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், கொவிட் தொற்று ஏற்படும் கைதிகளை கந்தகாடு, கல்லேல்ல தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைதிகளை பார்வையிட தற்காலிக தடை விதித்துள்ளதாகவும் புதிய கைதிகளை தனித்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை சிறைச்சாலைகளில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுகாதார உபகரண தொகுதிகளை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.