தமிழீழ விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டுமென்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் கட்சியே என்றும், இந்தக் கட்சியை தடை செய்யாது விட்டது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் ஹிட்டலர், கம்போடியாவில் பொல்பொட், ஈராக்கில் சதாம் உசேன் போன்றோர் கொல்ப்பட்டதும் அவர்களின் அரசியல் கட்சிகளும் இல்லாமல் செய்யப்பட்டதை போன்று, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாமல் செய்திருக்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தக் கட்சியினர் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளை நினைவுக் கூர்ந்து, பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் நடந்துகொள்வார்களாக இருந்தால் அவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.