வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கத்தால் இலங்கைகுள் நுழைந்த சூறாவளி மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையே நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புரவி புயல் நாட்டை விட்டு விலகிச் சென்றிருந்தாலும், கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பரப்புகள் தொடர்ந்தும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் நாளை காலை வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் குறைந்தளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பகுதிகளில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 60-90 கிலோ மீட்டர் வரை காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன் காற்றின் வேகம் 40-50 கிலோ மீட்டர் வரை காணப்படும்.
நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடல் பரப்புகளின் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2- 3 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.