File Photo
அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பொது சுகாதார பரிசோதகரின் முகத்தில் குறித்த நபர் எச்சிலை உமிழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவர், குறித்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போதே, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, குறித்த நபர் சிகிச்சைக்கு செல்ல எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு செய்துள்ளதாகவும், பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிகிச்சையைப் புறக்கணிக்கும் விதமாக யாராவது நடந்துகொண்டால், நாட்டுக்குத் துரோகமிழைக்கும் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்களின் விரும்பத்தகாத நடத்தை காரணமாக பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் சேவையில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் விரும்பமின்றி இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளரை வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதார பரிசோதகருக்கு தொற்றாளர் உள்ளிட்ட பிரதேசவாசிகள் சிலரால் இடையூறு விளைவிக்கப்பட்டதையும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த சம்பவத்துக்கு முகங்கொடுத்த இரண்டு பரிசோதகர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அட்டுலுகம பகுதியில் இனங்காணப்பட்ட சுமார் 300 தொற்றாளர்கள் தமது வீடுகளில் ஒளிந்திருப்பதாக குறித்த சங்கத்தின் செயலாளர் பஹேந்திர பாலசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.