February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘புரவி’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவான தாளமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் நேற்று இரவு  புரவி புயல் இலங்கையின் கரையைக் கடந்துள்ளது.

இதனால், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம்

அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலங்களில் 245.1 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 4,605 குடும்பங்களைச் சேர்ந்த 15,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ். மாவட்டத்தில் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 15 வீடுகளுக்கு முழுமையான அளவிலும் 153 வீடுகளுக்கு பகுதியளவிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, வர்த்தக நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை போன்ற பகுதிகளில் 5 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா

வவுனியா மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பலமான காற்று காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 2 வீடுகளுக்கு பகுதியளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு வசித்து வந்த 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த 211 பேர் தமது உறவினர்களின் வீடுகள் உட்பட பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்னால் மரமொன்று வேரோடு முறிந்து வீதியில் வீழ்ந்துள்ளதுடன், சாந்தசோலைப்பகுதி மற்றும் புளியங்குளம் நெடுங்கேணி பிரதான வீதியிலும் மரங்களும் சாய்ந்து, வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ளம் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலை மதிலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவில் பாரிய அளவிலான விவசாய காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னார்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 1108 குடும்பங்களைச் சேர்ந்த 3,845 பேர் புயல் மற்றும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3,045 பேர் 15 நலன்புரி நிலையங்களிலும் ஏனையோர் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை, தலைமன்னார் பியர், பேசாலை, விடத்தல்தீவு, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்களின் படகுகள் உட்பட கடற்தொழில் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும், படகுகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி

இதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மரங்கள் சறிந்து விழுந்ததில் இரு வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலும் பாரியளவிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

This slideshow requires JavaScript.

முல்லைத்தீவு

புரவி புயலுடன் முல்லைத்தீவில் 224 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பலத்த காற்றுன் கூடிய மழை பெய்து வருவதனால், கனகாம்பிகைக் குளத்தின் நீர் மட்டம் 6 அடியாக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு, முல்லைத்தீவு பிரதேசத்துக்கு நுழையும் வட்டுவாகல் பாலம், செல்வபுரம் பகுதி வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயம், கருநாட்டுக் கேணி அரச தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட இடைதங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம்

புரவி புயல் இலங்கையைக் கடந்து, இந்தியா நோக்கி செல்லவுள்ள நிலையில், புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதேவேளை, சிறு கடல் மற்றும் பெருங்கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதினால் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லாது, படகுககளையும் கரையோரத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் வந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.