October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட 1009 குடும்பங்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைப்பு

புரவி சூறாவளியால் மாவட்டங்கள் சிலவற்றில் சிறியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது இடம்பெயர்ந்த 1009 குடும்பங்களை சேர்ந்த 4007 பேர் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூறாவளியால் 15 வீடுகள் முழுமையாகவும், 170 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு கரையைக் கடந்த புரவி சூறாவளி தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு சூறாவளி இலங்கையின் வடமேற்கு கரையின் ஊடாக திரியாய் – கச்சவேலி ஊடாக நாட்டின் நிலப்பரப்புக்குள் புகுந்ததுள்ள நிலையில், இது இன்றைய தினத்தில் மன்னார் ஊடாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூறாவளி தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் 134 குடும்பங்களை சேர்ந்த 522 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 628 குடும்பங்களை சேர்ந்த 1949 பேரும், மன்னார் மாவட்டத்தில் 324 குடும்பங்களை சேர்ந்த 1114 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 422 பேரும் 65 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.