July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புரவி புயலால் பலத்த பாதிப்புகள் இல்லை’; அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

இலங்கையில் புரவி புயலால் இதுவரை பலத்த பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவான தாளமுக்கம், சூறாவளியாக மாற்றமடைந்து நேற்று இரவு மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையில் கரையைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்ககப்பட்டது.

இந்நிலையில், நேற்று புரவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் கரையைக் கடந்து இரவு 8.45 மணியளவில் இலங்கைக்குள் பிரவேசித்தது.

சூறாவளி கிழக்கு கடற்கரையை ஊடறுத்துச் செல்லும் போது வடக்கு, கிழக்கு மாகதாணங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த மாகாணங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

புரவி புயல் இலங்கைக்குள் பிரவேசித்த போதிலும், பாரியளவான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் மரம் முறிந்து விழுதல், போக்குவரத்து தடைப்படுதல் போன்ற சம்பவங்களே பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சூறாவளி இன்று முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரவி நாட்டை ஊடறுத்துச் செல்வதால் நாட்டில் மினி சூறாவளி நிலமையொன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 – 90 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீட்டர் வரை அதிகரிப்பதற்கு சாத்தியம் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.