
புதிய அரசமைப்பு வரைவை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ்த் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்புக்கான சிபாரிசுகளை இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று ஒன்றுகூடி விவாதித்தன.
இதன்போது, தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் சிபாரிசு வரைவொன்றை சமர்ப்பிப்பது என முடிவாகியுள்ளது.
கடந்த அரசமைப்பு உருவாக்க முயற்சியின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைவு, கடந்த அரசில் தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த வரைவு, அத்துடன், வடக்கு மாகாண சபையால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு ஆகியவற்றின் உள்ளடங்கங்களிலிருந்து மேம்பட்ட புதிய வரைவை உருவாக்குவது எனவும் முடிவானது.
இந்த வரைவை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மாவை சேனாதிராஜா தலைமையில் சீ.வீ.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் வி.சிவநாதன் ஆகியோர் அரசமைப்பு வரைவை உருவாக்கும் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், எதிர்வரும் 10 நாள்களில் இந்தக் குழு வரைவை இறுதி செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்குச் சமர்ப்பிப்பது எனவும் முடிவாகியுள்ளது.
கட்சித் தலைவர்களின் அங்கீகாரத்தின் பின்னர், அந்த வரைவை மாவை சேனாதிராஜா, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் நிபுணர்களை வைத்து ஓர் அரசமைப்பு வரைவை உருவாக்கி வருவதாக அவரது பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைவையும் உள்ளடக்கியதாக, புதிய வரைவைத் தயாரிப்பது எனவும் முடிவாகியுள்ளது.