
மன்னாரில் புரவி சூறாவளி தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று நள்ளிரவின் பின்னர் மன்னார் மாவட்டத்தினுடாக இந்த புரவி சூறாவளி கடந்து செல்லும்.
இதனடிப்படையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்,பிரதேசச் செயலாளர்கள், முப்படையினர் ஆகியோருடன் விசேடகூட்டம் நடத்தப்பட்டு, இந்நிலைமையினை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலோரம் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கிராம அலுவலகர்கள் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் தேவை ஏற்படும் பட்சத்தில் பாடசாலைகளில் மக்கள் இடம் பெயர்ந்து தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இதேவேளை இன்றைய தினம் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளான கிராமங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர்,அனார்த்த முகாமைத்துவ குழுவினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் விஜயம் மேற்கொண்டனர்.

மேலும் அவசர உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் உடனடியாக மாவட்டச் செயலத்தினூடாகவும்,பிரதேசச் செயலகங்கள் ஊடாகவும் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்