
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டதை போன்று இந்த அரசாங்கத்தினாலும் அவர்களை ஏமாற்றவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே திகாம்பரம் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கம் கோரிக்கையை மாத்திரமே விடுத்துள்ளதாகவும், ஆனால் அந்தக் கோரிக்கையை கம்பனிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதேவேளை ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் கூறியுள்ள போதும், அது அடிப்படை சம்பளமா? அல்லது ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து வழங்கப்படுவதா? என்பததை கூறவில்லையெனவும், இதனால் அது தொடர்பாக அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் திகாம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.