November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் தோல்வி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்டினால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வரவு – செலவுத் திட்டம் மீது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒரு தரப்பினரும் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மறு தரப்பினரும் கோரியுள்ளனர்.

அதனையடுத்து வரவு – செலவுத்திட்டம் மீது எவ்வாறான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதனடிப்படையில் வரவு – செலவுத் திட்டத்தின் மீது  பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவரும்,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருமாக 19 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக 24 பேர் வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

யாழ் மாநகர சபையின் 45 மொத்த உறுப்பினர்களில் குறித்த அமர்வில் 43 உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லை.

இதனால் 24 இற்கு 19 என்ற வாக்குகளின் அடிப்படையில், ஐந்து மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.