புரவி சூறாவளியால் இலங்கையில் ஏற்படக் கூடிய அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக செயற்படக் கூடியவகையில் மீட்புக் குழுக்கள், நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனர்த்தங்களால் இடம்பெயரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான நிதிகளை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சூறாவளி எச்சரிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் சமல் ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.
சூறாவளியின் போது மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கே அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகவும், இதனால் அந்த மாவட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்படும் முகாம்களில் கொவிட் தொற்றுப் பரவுவதை தடுக்கும் வகையில் விசேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.