January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

File Photo

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையில் கரையை கடந்து இலங்கையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சூறாவளி தொடர்பிலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூறாவளி ஏற்பட்டால் கிழக்கு மாகாணம் அதிகமாக பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் வடக்கு மகாணத்திலும் சூறாவளி தொடர்பிலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலே வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு நாளை தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சூறாவளியினால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சில பாடசாலைகள் தயார் நிலையில் வைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.