May 13, 2025 13:11:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமெரிக்கத் தூதுவருக்கிடையில் சந்திப்பு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.ரெப்லிட்ஸ் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்துவற்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்ள முடியும் என தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,  மாகாண சபை முறைமையினை முழுமையாக பயன்படுத்துவதனை ஆரம்பமாக கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பூரணமாக அடைந்துகொள்வதை நோக்கி நகர முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ள நிலையில், குறித்த அபிவிருத்தி திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய கடற்றொழில் சார் விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

துறைசார் அதிகாரிகளுடன் கலந்தரையாடி,காலநிலை மாற்றம் உள்ளடங்களாக, அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவை வழங்குவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன் போது தெரிவித்துள்ளார்.