File Photo
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து, தற்போது திருகோணமலைக்கு தென்கிழக்காக 330 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளி மேலும் வலுவடைந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையில் கரையை கடந்து இலங்கையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சூறாவளி கிழக்கு கடற்கரையை ஊடறுத்து செல்லும் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த மாகாணத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் அவசர நிலைமைகளின் போது செயற்படக் கூடியவகையில் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லல், மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக உரிய பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் தொண்டர் அமைக்களை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், சூறாவளிக்கு முன்னரான ஆயத்தம் மற்றும் சூயாவளியின் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக ‘தமிழ் அவனி’ க்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் கூறுகையில்,
சூறாவளியினால் பாதிக்கப்டும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு குறித்த பகுதிகளிலுள்ள பாடசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டு இவ்வாறு பாடசாலைகளில் தங்கவைக்கப்டுபவர்கள் குடும்பம் குடும்பமாக தனித் தனி வகுப்பறைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கூடாக முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, குறித்த சூறாவளியானது கடற்பரப்பிலிருந்து நிலப்பரப்பை நோக்கி நகரும் போது நீர் நிலப்பரப்பை நோக்கி வரும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் சுனாமி ஏற்படுதாக எண்ணி மகள் அச்சமடையத் தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இதே போன்றதொரு சூறாவளி நாட்டை ஊடறுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.