
மஹர சிறைச்சாலையில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை நிலைமைக்கு காரணமாக இருந்த 125 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் குறித்த கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், மற்றுமொரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது, கடந்த 29 ஆம் திகதி மாலை மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை விளக்கமறியல் கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஏற்பட்ட மோதலையடுத்து, அதிகாரிகள் தமது குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளதோடு, 107 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.