கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் பொறுப்பேற்காவிட்டால் அதனை அரச செலவில் தகனம் செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொறுப்பேற்கப்படாத நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்த உடல்களை சுகாதார மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய, உடனடியாக அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடல்களை தகனம் செய்வதற்கு செலவிடப்படும் தொகையை அனர்த்த முகாமைத்து நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனாவினால் உயிரிழந்த 5 பேரின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் குடும்பங்கள் ஒப்புதல் வழங்க மறுத்தமையினால் அந்த சடலங்கள் தொடர்ந்தும் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.