November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூறாவளியுடன் வடக்கு, கிழக்கில் கடும் மழை: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையின் திருகோணமலைக்கு தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி நாளை மாலை ஐந்து மணிக்குப் பின்னர், முல்லைத்தீவிற்கும் மட்டக்களப்பிற்கும் இடைப்பட்ட பகுதி ஊடாக கரையை கடக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

இது பற்றிய சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ள திணைக்களம், இந்த காலப்பகுதியில் நாட்டை சூழவுள்ள கடல் கொந்தளிப்பானதாக மாறலாம் என்பதுடன் சில மாகாணங்களில் கடும் காற்று வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றைய பிரதேசங்களிலும் 60 – 70 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கடி காற்று வீசக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், சில இடங்களில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

இதனால் அதற்கு முகம்கொடுக்கக் கூடியவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆயத்தங்களை ஆராயும் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் இடர்காப்பு முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து கொண்டார்கள்.

நாளை முற்பகல் பதினான்கு பிரதேச செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.