July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்: இலங்கையின் இன்றைய நிலவரம்

Photo: Twitter/ Srilanka red cross

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதாகவும் நிவாரண நடவடிக்கைகளுக்காக தற்போது மாவட்ட செயலகத்திற்கு 12.4 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டம் சற்று கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. எனினும் இனிவரும் காலங்களிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து இந்த கட்டுப்பாட்டினை தொடர்ந்து பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் 235 பேருக்கு கொரோனா தொற்று

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும், கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேரும் இவ்வாறாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அக்கரைப்பற்று சந்தையில் தொடர்புபட்ட 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அம்பாறையில் 1361 பேரும்,  மட்டக்களப்பில் 5287 பேரும், திருகோணமலையில் 1249 பேரும், கல்முனையில் 2776 பேரும்  உட்பட கிழக்கு மாகாணத்தில் 10673 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் அங்கு உப கொரோனா கொத்தணி உருவாகும் நிலை ஏற்படாது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை பகுதியில் மேலும் 6 பேருக்கு தொற்று

ஹட்டன் – பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தைவேல் தெரிவித்தார்.

அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவை நகரில் உள்ள வெற்றிலை விற்பனை செய்யும் கடை ஒன்று பூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து குயினா தோட்டத்திற்கு வருகை தந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, கடந்த 28 ஆம் திகதி அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியானபோது, மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஐந்து பேரும் பொகவந்தலாவை நகரில் வெற்றிலை விற்பனையில் ஈடுபடும் நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்றுக்குள்ளான நபர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வங்கி ஓயாத் தோட்டப்பகுதியில் அனைவருக்கும் சுயதனிமை

நுவரெலியா மாவட்டத்தின் நானுஓயா, வங்கி ஓயாத் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பில் இருந்து குறித்த தோட்டப்பகுதிக்குச் சென்ற ஒருவருக்கு இதற்கு முன்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருடைய சகோதரியான 27 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர், குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர். பரிசோதனை முடிவுகள் இன்று வெளியான போது, குறித்த பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வங்கி ஓயாத் தோட்டப்பகுதியில் உள்ள அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பகுதிக்குள் உள் நுழைவதற்கும், குறித்த பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி

சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, முல்லைத்தீவைச் சேர்ந்த அரச ஊழியருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையின் வவுனியா அலுவலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தாராக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைதீவு, உடையார்கட்டு பகுதியை சேர்ந்த குறித்த நபர் விடுமுறையில் அங்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை வவுனியாவில் உள்ள அவரது அரச விடுதிக்கு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் தொடர்ச்சியான வயிறுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டநிலையில், இன்றையதினம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் மாணவர் வரவு வழமைக்கு வரவில்லை

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் பின்பு பாடசாலைகள் மீள ஆரம்பித்து ஒரு வாரம் கடந்துள்ள போதும்,  மாணவர்களின் வரவு வீதம் 60 தாண்டவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொரோனாத் தாக்கத்தின் பின்பு கடந்த மாதம் 23 ஆம் திகதி அன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் மாணவர்களின் வரவு இன்று வரை மிகவும் மந்தமாகவே உள்ளது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த 23 ஆம் திகதி 49 வீத மாணவர் வரவு காணப்பட்டது. இன்று 60 வீதமாகக் காணப்பட்டது.

இதன் காரணமாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் சீராக முன்கொண்டு செல்லப்படுவதில் தொடர்ந்தும் இடையூறாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் வடக்கு மாகாணத்தில் மாணவர் வரவை அதிகரிக்க கல்வி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அட்டுளுகம பகுதியில் 231 தொற்றாளர்கள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுளுகம மற்றும் பண்டாரகம பிரதேசங்களில் கடந்த 15 நாட்களில் 231 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை, பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்தியர் ஸ்ரீமலி அமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த பிரசேத்தில் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 310 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.