January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகி, உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி கோரியும், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் எரிக்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரியும் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் இவ்வாறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் ப்ரீதி பத்மன் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று ஆரம்பமாயின.

இந்நிலையில், குறித்த மனுக்களை இன்று உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், ஏர்மிசா டகேல், விரான் கொரயா, என்.எம்.சஹீத் மற்றும் பாயிஸ் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர்.