January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்”

தமிழ் இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம்      யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும்போதே இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இதனை தெரிவித்தார்.

மேலும், 90 இராணுவ வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி அதனடிப்படையில் குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்கள் பிரதேச செயலாளர்களூடாக செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில்  விவசாயத் துறை சார்ந்த வெற்றிடங்கள் நிலவுகின்றன. அத்துடன் மேசன், தச்சு, மின் இணைப்பாளர் போன்ற வெற்றிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவ்வாறான துறைகளில் இணைவதன் மூலம் யாழ் குடாநாட்டினை மேலும் விருத்தியடையச் செய்ய முடியும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று காரணமாக தனியார் துறைகளில் பணிபுரிந்த பல இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். அவர்கள் நிரந்தரமான தொழில் வாய்ப்பொன்றினை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த சந்தர்ப்பமாக இது அமையும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. இதனூடாக வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை குறைத்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.