January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் மரணித்த 5 பேரின் உடல்களை எரிக்க அவர்களின் குடும்பங்கள் ஒப்புதல் வழங்க மறுப்பு

File Photo

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் குடும்பங்கள் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அத்தோடு, சவப்பெட்டிக்காகச் செலுத்த வேண்டிய 58 ஆயிரம் ரூபாவையும் செலுத்துவதற்கும் அவர்கள் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை எரிக்கும் நடைமுறை இலங்கையில் பின்பற்றப்பட்டு வருவதோடு, குடும்பத்தினரும் ஒப்புதல் வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மதக் கொள்கைப்படி எரிக்காது அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலைமையில், இறுதியாக உயிரிழந்த ஐவரின் குடும்பத்தினர் அந்த உடல்களை எரிப்பதற்கு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளனர்.

தமது குடும்ப உறுப்பினர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் தமது நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டு வருகின்றதாகவும், சவப்பெட்டிக்கு 58 ஆயிரம் ரூபா செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் 24 மணித்தியாலங்களில் எரிக்கப்பட வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமையால் வைத்தியசாலை பிரேத அறைகளில் அந்த உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.