
File Photo
இந்துக்களின் புனித நிகழ்வுகள் தொடர்பாக வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் பொலிஸாரையும் தெளிவுபடுத்த நடவடிக்கையெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருநாளில் வடக்கில் சில இடங்களில் விளக்கேற்றுவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் இடையூறுகளை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பி சிறீதரன் எம்.பி உரையாற்றினார்.
இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விளக்கேற்றிய முதியவர் ஒருவர் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி, இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.
இதேவேளை கார்த்திகை மாதமென்றால் ஏன் இந்தளவுக்கு இராணுவமும், பொலிஸாரும் அச்சப்படுகின்றனர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை எனவும், கருணையையும் அன்பையும் போதிக்கும் புத்த பகவானின் வழியில் வந்தவர்கள் இவ்வாறாக நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
இதனால் இந்துக்களின் நிகழ்வுகள் தொடர்பாக இராணுவத்தினரையும் பொலிஸாரையும் தெளிவுபடுத்தவும், அந்த நிகழ்வுகளுக்கு இடையூறு செய்ய வேண்டாமென அறிவிக்கவும் நடவடிக்கையெடுக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.